செவ்வாய், 10 மே, 2016

சீனாவின் பேம்பூ மரம் கற்பிக்கும் வாழ்க்கை பாடம்

சீனாவின் பேம்பூ மரம் கற்பிக்கும் வாழ்க்கை பாடம்...

கீழ்க்கண்ட இந்த இணைப்பை பார்க்கவும்
https://www.youtube.com/watch?v=2nFDmrLGgYM

அன்புடன்
சங்கீதா சீனிவாசன்

திங்கள், 28 செப்டம்பர், 2015

மகிழ்ச்சியாக வாழ மூன்று வழிகள்

வெளிசூழ்நிலை என்னவாக இருந்தாலும்
மனம் அனுமதிக்காமல் நமக்குள் எந்த மாற்றமும் நடக்கபோவதில்லை...

நம் கவலைக்கு பொதுவாக மூன்று காரணங்கள்....
முதலாவது,
 "நம்மை பற்றி மற்றவர்கள் என்ன
நினைப்பார்கள் என்று நினைத்து கவலை படுவது. இரண்டாவது, ஒரு செயலை செய்துமுடித்த பின் அதில் திருப்தியடையாமல்...."அதை வேறுவிதமாக செய்திருக்கலாமோ" என்ற கவலை.
மூன்றாவது, நாளை பற்றிய கவலை...(எதிர்காலம்)

இவற்றை கையாள்வது சுலபம்...

பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் வரைதான் அது பிரச்சினை...தீர்வு கிடைத்தபின் அது ஒரு அனுபவம்..

முதலாவது கவலை, நம்முடைய பிரச்சினையே அல்ல, அது முழுதும் மற்றவர்களின் பிரச்சினை..
காந்தியையே குறைகூறும் உலகத்தில் நம்மை பற்றி அப்படி என்ன புகழ்ந்துவிடப்போகிறார்கள்? என்னதான் புறம் கூறுதல் கூடாது என்று சொன்னாலும் / படித்தாலும் கேட்டுவிடவா போகிறோம்?

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால், நமக்கு பின்னால் நம்மை பற்றி என்ன பேசுகிறார்கள்? என்பதை தெரிந்துகொள்ளாமல் இருக்க பழகிக்கொள்ள வேண்டும். இது பாதி கவலையை இல்லாமல் செய்துவிடும்..

மனிதர்கள் பல விதம். பத்து பேருக்கு பிடித்ததுபோல் இன்னொரு பத்துபேரால் கூட இருக்க முடியாது. பிறகெப்படி ஒருவரால் அனைவருக்கும் பிடித்ததுபோல இருக்க முடியும்? முடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்... மாற்ற முடியாத விஷயங்களோடு மல்லுக்கு நிற்காதீர்கள்.

நம்மை பற்றி பிறர் என்ன பேச வேண்டும், எப்படி நினைக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அதைப்போல் நாம் நடந்துகொள்ள வேண்டும். அதற்காக, அதேபோல் அவர்கள் நினைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கூடாது.. வேறுவிதமாக நினைத்தால் அது நம்முடைய பிரச்சினை அல்ல...அவர்களுடைய கண்ணோட்டம் வேறு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இரண்டாவது, எதிலும் திருப்தியடையாமல் இருப்பது,
இதற்கு ஒன்றுதான் சொல்ல வேண்டும். கடந்த காலத்தை சரி செய்யவே முடியாது. முடிந்தது முடிந்ததுதான். என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக்கொள்ள வேண்டும். மின்னஞ்சலை அனுப்பும் முன் பல தடவை சரி பார்த்துகொள்ளலாம். ஆனால், அனுப்பிய பிறகு ஒரு முறை கூட, செய்தியை வேறுவிதமாக சொல்லியிருக்கலாமோ...என்று எண்ணவே கூடாது. அதில் அணுவளவும் பயனில்லை. அனுப்பிவிட்டோம். வேலை முடிந்தது.
பதில் வரும்வரை அதை பற்றி எதுவும் சிந்திக்க கூடாது. இதை வாழ்வில் எல்லா செயலிலும் பொருத்தி பார்க்கலாம்.

மூன்றாவது காரணம், எதிர்காலத்தை நினைத்து கவலை படுவது....
பக்திதான் இதற்கு மிகச்சிறந்த மருந்து. ஏதோ ஒன்றின் மேல் முழு நம்பிக்கை வைப்பது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சிவன், அல்லா, இயேசு, வானம், கடல், பூக்கள், மலை, மண் என எதுவாகவும் இருக்கலாம். ஆனால், கேள்வி கேட்காத நம்பிக்கையாக இருக்க வேண்டும். அந்த உண்மையான பக்தியோடு, நாளை எது நடந்தாலும் அது என் நல்லதுக்குத்தானே தவிர கவலை பட அல்ல என்று மனதார நம்ப வேண்டும். அடுத்த பத்து ஆண்டுகளில் நான் எப்படி இருக்க வேண்டும் திட்டமிடுவது வேறு, கவலை படுவது வேறு. எதிர்காலத்தை பற்றி திட்டமிடுங்கள் ஆனால் கவலை படாதீர்கள்.

ஒன்று மட்டும் உண்மை... கவலை படுவதால் எதுவும் மாற போவதில்லை. மறுமுறை உபயோகிக்க வேண்டும் என்று துணிகளை துவைக்கிறோம், பாத்திரங்களை கழுவுகிறோம், வாகனங்களை கூட குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதிக்கிறோம். இவைகளுக்கே நாம் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது நம் மனதை எப்படியெல்லாம் பராமரிக்க வேண்டும் என்று யோசியுங்கள்!

டெல்கார்னகி சொன்னதுபோல, எந்த பொருளுக்கும் அதைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்குவது முட்டாள்தனம். அதைப்போல அற்பமான விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்கி கவலைப்படுவதும் முட்டாள்தனம்தான். கவலை இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வோம்.

வாழ்க வளமுடம்...

















அன்புடன்
சங்கீதா சீனிவாசன்

வியாழன், 24 செப்டம்பர், 2015

நமது கலாச்சாரம்.. நமது பெருமை















இன்று உலகம் எவ்வளவோ மாறிவிட்டது. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் வந்தாரை மட்டுமே வாழ வைக்கும் தமிழகமாக மாறிவிட்டதோ என்று அஞ்ச தோன்றுகிறது. வந்தாரை என்பதில் நான் மனிதர்களை மட்டும் பார்க்கவில்லை. அவர்களின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் எல்லாம்தான்.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்பதற்கேற்ப
சமூகத்திற்கு நன்மை பயக்கும் புதிய மாற்றத்தை வரவேற்று
நன்மையல்லாத பழையதை நீக்கிவிடலாம்...
இதற்கு பெயர்தான் மாற்றம்! இதற்கு பெயர்தான் வளர்ச்சி!
இதுதான் சமூகத்திற்கு தேவை!

ஆனால், இன்று அப்படியா நடக்கிறது?
அமெரிக்காவில் நீல நிறத்தில் உணவு சாப்பிடுறாங்க என்றால்,
உடனே நம்ம சாதத்தில் நீல நிற மையை ஊற்றியாவது நீல நிற உணவாக மாற்றி சாப்பிட்டு விடுவோம்!

மாற்றம் என்ற பெயரில், மேலை நாட்டு கலாச்சாரங்களை
ஏன்? எதற்கு? என்று ஒரு வினாடி கூட சிந்திக்காமல் ஏற்றுகொள்கிறோம்!
இதுவரை இல்லாத ஒன்று நம் சமூகத்திற்கு புதிதாக நடைமுறைக்கு
வருகிறதே,  இதனால் நமக்கும் நம் சமூகத்திற்கும் நம் நாட்டிற்கும்
நன்மையா தீமையா என்று ஆராயாமல்
கண்மூடித்தனமாக அப்படியே ஏற்றுக்கொண்டோம்.

இன்று, ஆணும் பெண்ணும் சமம்!!
என்பது...
இருவருக்கும் பேச்சு சுதந்திரம்
எழுத்து சுதந்திரம்
கருத்து சுதந்திரம்
சொத்துரிமை
சமத்துவ கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
ஊதியத்தில் சம உரிமை
இவைதானே தவிர...

ஒரே மாதிரியான ஆடை அணிவதல்ல..
அப்படியே பார்த்தாலும், எந்த ஆண்களும்
அரைகுறை ஆடையை அணிவதுபோல் தெரியல...
ஒரு மாதம் குழந்தையை நான் கவனித்தால் அடுத்த மாதம் நீ..

இருபாலருக்கும் இடையில் எந்த வேறுபாடும்
வித்தியாசமும் இருக்க கூடாது என்றால், பாலினத்தில் பெண் என்ற பெயரையே நீக்கிவிடலாமே!! எதற்கு தேவையில்லாமல் ஒரு பாலருக்கு இரண்டு பெயர்கள்? பூமியில் ஒரு சூரியன் ஒரு நிலவு. அப்படித்தான் குடும்பத்தில் ஒரு ஆண் (கணவன்) ஒரு பெண்.(மனைவி). இரண்டு சூரியன்கள் இருந்தால் பூமி என்னாகும்??





நம் அரிய பழம்பெரும் கலாச்சாரம், வளர்ந்த சமூகத்தால் மதிக்கப்படுவதுதான், அதற்கு கிடைக்கும் மரியாதையே தவிர..
நாம் வளர்ந்த பின் அதை தூக்கி எறிவது அல்ல...



மேலை நாட்டில்,
பெண்ணோ ஆணோ எத்தனை திருமணம்
வேண்டுமானாலும் செய்யலாம்,
பிள்ளைகள் பெற்று, வாழ்க்கையே வாழ்ந்து முடித்துவிட்டு
கடைசியாக திருமணம் செய்யலாம்..
ஆண்கள், உடலை மறைக்க உடை அணிவார்கள்..
ஆனால், பெண்களுக்கு.. உடலை காட்டக்கூடிய வகையில்தான்
உடையே தயாரிக்கப்படும்..
அந்த துணிகளை கொண்டுவந்து வியாபாரத்திற்காக மக்கள் தொகை அதிகம் உள்ள கலாச்சாரமுடைய நாட்டில் விற்று பணம் சம்பாதிக்கிறார்கள்.
நாம் நம் பாரம்பரியத்திற்கு முன்னுரிமை கொடுக்காமல் பணத்தையும் கொடுத்து, நம் கலாச்சாரத்தையும் அழிக்கிறோம்!
இதுதான் நமக்கு தெரிந்த வளர்ச்சியா?

குருவுக்கு அடுத்துதான் கடவுள் என்ற இந்த
இடத்தை ஆசிரியர்களுக்கு கொடுத்த ஒரே கலாச்சாரம் உலகத்திலேயே நமது கலாச்சாரம்தான். இப்போதெல்லாம் ஆசிரியர்களை சக மனிதராக நினைப்பதே பெரிது..
இதில் எங்கே கடவுளை விட ஒருபடி மேலே வைப்பது!!!




மேற்கத்திய கலாச்சாரம்
 தவறு என்று சொல்லவில்லை.
நம்மிடம் இல்லாத நல்ல பழக்கங்கள் அவர்களிடம்
நிறைய உள்ளன..



வளரும் நாடுகள் எல்லாமே வளர்ந்த நாடுகளை அன்னார்ந்து பார்த்து ஆச்சர்யபடுவதில் வியப்பேதுமில்லை!!
அதற்காக அவர்கள் கலாச்சாரம் உயர்ந்தது நம் கலாச்சாரம் தாழ்ந்தது என்ற கண்ணோட்டம் தவறு..

அவர்கள் பண்பாடு வேறு நம் பண்பாடு வேறு..அவ்வளவுதான்!!
நாம் நாளை இன்னும் வளர்ச்சி அடையலாம்...ஆனால்,
அடையாளத்தை இழக்க கூடாது.
திருடனே பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல்..

நாமே விழித்துக்கொள்ளவில்லை என்றால்
எல்லாம் இழந்து பின் வருந்துவதில் பயனேதும் இல்லை...
இன்று இல்லாத பணம் நாளை வரலாம்..
வெள்ளையர்களை விட உயரத்திற்கு செல்லலாம்..
உழைப்பு மட்டும் இருந்தால் போதும்!! ஆனால்,

கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் இவற்றை இழந்தால்
மீண்டும் பெற முடியுமா??
நாம் இருக்கும்போதே இதை வாழ வைக்காவிட்டால்,
யாரால் என்ன செய்ய முடியும்? நம் கலாச்சாரத்தை நம் எதிர்கால
தலைமுறையிடம் படிப்பிக்க வேண்டியது நம் கடமை...
புத்தகத்தில் படித்து நடைமுறைபடுத்த இது அறிவியல் இல்லை!!
புரிந்தவர்கள் செயல்படுத்துங்கள்!!




















அன்புடன்
சங்கீதா சீனிவாசன்

வியாழன், 3 செப்டம்பர், 2015

இயற்கையின் அதிசயம்...

தாஜ்மஹாலோ, சீனப்பெருஞ்சுவரோ
அல்ல அதிசயம்...!



இவைதான் அதிசயங்கள்..

கண்களை மூடி சில நிமிடம் இந்த கற்பனை வனத்துக்குள் வாழ்ந்து பாருங்கள்!!

பச்சை பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சியூட்டும் படர்ந்து விரிந்த பசுமையான வனம்..
அழகிய பாதை நெடுகிலும் பல் வண்ண பூச்செடிகளும்,
பவழம் போன்று மின்னும் கூழாங்கற்களும்...
நடைபாதையில் வண்ணக்கம்பளம்
விரித்தது போல் பாதம் தொட காத்திருக்கும் மஞ்சள், சிகப்பு, ஊதா மற்றும் வெண்மை நிற பூக்கள்...



அதில் கால் வைக்கவோ வரவில்லை மனம்...
அதிலிருந்து வரும் மணமோ நெகிழவைக்கிறது மனத்தை..!!

பூக்களில் தேனருந்தும் வண்ணத்துப்பூச்சிகள்...
இலைகளில் முத்து
போல் பளிச்சிடும் பனித்துளி..
மரக்கிளையில் பழம் கொறிக்கும் துருதுரு அணில்...
கண்ணெதிரே, நீண்ட பாலருவி...
சில்லென்று முகத்தில் முத்தமிடும் மழைச்சாரல்...
இமைகள் மூடும் கணம்.... திறந்தது மனம்!

வெள்ளி கொலுசு
போல் சலசலவென சத்தமிடும் தூய
நீரோடை, அதில் முகம் பார்க்க வளையும்
வரிக்கவிதைகள்...!!

மனிதர்களின் ஆரவாரம் துளியும் இன்றி
ஆழ்ந்த அமைதியின் நடுவே...
குருவிகளின் கீச்சிடும் சத்தமும்,
படபடவென கூட்டமாக சிறகடித்து
பறக்கும் பறவைகளும்....
எங்கிருந்தோ வரும் புல்லாங்குழலின்
இனிய இசையும்....!!
உலகையே மறக்கசெய்யும் இவை ஒட்டுமொத்த வனத்தையுமே அலங்கரித்திருந்தன.....


இதுமட்டுமா....

கரிய இரவுக்கு ஒளியூட்டும்
பால் வண்ண பவுர்ணமி நிலவு
அதிகாலை அமைதியும், செண்பகத்தின்
இசையும்..பருத்திபோல் அலைபாயும்
கருமேகம்...வானத்தை வண்ணத்தால்
அலங்கரிக்கும் அழகிய வானவில்! .
லேசான இடி, மின்னல்...
மகிழ்ச்சியில் தோகை விரித்தாடும்
மயில்!!

அந்த அழகிய தருணம்...
மனதை தொலைத்து....கவலை, சோகம்,
கண்ணீர் மறந்து.......புதிதாய்
பிறந்ததுபோன்ற புத்துணர்ச்சி!!
இமை மூடி திறக்கும்
நிமிடங்களை கூட சேர்த்து வைத்து ரசிக்கனும்..

நமக்கு ஐந்து அறிவு இருந்திருந்தால்...
அம்பானியும் இல்லை!! ஐஸ்வர்யா ராயும் இல்லை!!
ஆறறிவு இல்லாவிட்டாலும் ஒவ்வொரு
பூக்களுமே ஐஸ்வர்யா ராய்தான்!!

இயற்கைதான் எல்லாமே.....
இயற்கையை ரசித்தாலே போதும்..
இயற்கையை உணர்ந்தாலே போதும்...

விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்ப முடிந்த மனிதனால் ஒரு சொட்டு தண்ணீரை கூட உருவாக்க முடியாது என்று உணர்ந்தாலே போதும்!..
மனிதனால் உருவாக்கப்பட்ட பண காகிதத்திற்காக காடுகளை அழிக்கும் நம்மால் சிறு புல்லை கூட உருவாக்க முடியாது என்று உணர்ந்தாலே போதும்..!!
இயற்கையின் பேராற்றலுக்கு முன் நாம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தாலே போதும்..!! நம்மால் உருவாக்க முடியாத விஷயங்களை கை எடுத்து வணங்கி அதை பொன் போல் பாதுகாக்க வேண்டியது மனித இனத்தின் கடமை!

இயற்கையோடு இயைந்து வாழ்வோம்..
இயற்கைக்கு உயிர்கொடுப்போம்...
இயற்கையை மனதார நேசிப்போம்...
இயற்கையின் படைப்புகளை ரசிப்போம்...


























அன்புடன்
சங்கீதா சீனிவாசன்

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

எது வேண்டுமானாலும் கேள் என் நேரத்தை தவிர...

இயற்கையை மீறி ஏதுமில்லை என்பதற்கு மிகச்சிறந்த
உதாரணங்களில் ஒன்றுதான் காலம்!!!
காலம் பொன் போன்றது என்பதற்கு பதிலாக
காலம் உயிர் போன்றது என்று கூட சொல்லலாம்...
இன்று முடியாவிட்டால் நாளை முடியலாம், பொன்/தங்கம் வாங்க!!
ஆனால், கடந்து வந்த நேற்றைய நாளை இன்று வாழ முடியாது!!

டேல் கார்னகி அவர்களின்
புத்தகத்தில் படித்த "இன்று ஒரு நாள் மட்டும்"
என்ற கருத்தை உங்கள் அனுமதியோடு
பகிர்ந்துகொள்ள ஆசைபடுகிறேன்.

அந்த வரிகள் இவைதான்...
"இன்று ஒரு நாள் மட்டும் நான் ஒரு மணி நேரம் படிப்பேன்
இன்று ஒரு நாள் மட்டும் நான் நேரத்தை வீணாக்க மாட்டேன்
இன்று ஒரு நாள் மட்டும் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்
இன்று ஒரு நாள் மட்டும் நான் உடற்பயிற்சி செய்வேன்"
என, ஒவ்வொரு நாளும் இன்று ஒரு நாள் மட்டும் நான்.............
என்ற இந்த வாக்கியத்தை உங்களுக்கு பிடித்தது போல
பூர்த்தி செய்யுங்கள். அந்த ஒருநாளை மட்டும்
கருத்தில் கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் எதுவும் குறையாக இருக்கவே முடியாது.

அன்றைய
நாளை நமக்கு பிடித்ததுபோல்
மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்போம்...
பல வருடங்கள் கழித்து திரும்பி
பார்த்தாலும் ஒவ்வொரு நாலும் நமக்கு
பிடித்தமாதிரி வாழ்ந்திருப்பது தெரியும்...

பொதுவாக, இன்றைய நாளை
நாம் வாழ்கிறோமா அல்லது கழிக்கிறோமா?
என்பதே பெரிய கேள்வி!!
எப்பொழுதும் நாளை என்ற ஒன்றை
நோக்கியே நம் மனம் பயணிக்கிறது...
நாளையும் நாளை என்றே எண்ணுகிறோம்...
நாளை வரத்தானே போகிறது. ஆனால்,
இன்று என்பது மீண்டும் வரவே வராது!!

இருபது வருடங்களுக்கு பிறகு
நடக்கபோகும் மகளின் திருமணத்திற்கு
இன்றே பணம் சம்பாதிக்கிறோம்...அப்போ
இருபது வருடம் கழித்து சம்பாதிக்கலாமா?
என்றால், அது தவறு...இதற்கு பெயர் சேமிப்பு...
ஆனால் அடுத்த மாதம் வரப்போகும் தேர்வு
முடிவுகளுக்காக தேர்வு எழுதும்போதிலிருந்தே
முடிவுகளை பற்றி கவலை படுவது
மதிப்பெண்களை பற்றி கவலை படுவது..
தற்காலிக பணியில் உள்ளவர்கள்
நாளைக்கு வேலை இருக்குமா என்று
ஒவ்வொரு நாளும் கவலையிலேயே கழிப்பது...

பிறகு, நல்ல மதிப்பெண்களை பெற்றாலோ
தற்காலிக பணியிலிருந்து நிரந்த பணி
மாற்றம் செய்தாலோ..
இதற்காகவா இவ்வளவு கவலை பட்டோம்
என்று நினைப்பது...ஆனால்,
போன காலம் போனதுதான்!!
ஆக, நாளை பற்றி திட்டமிடலாம்..
கவலை பட தேவையில்லை..
கவலை படுவதுதான் அந்த நாளை நாம்
வாழாமல் கழிக்கிறோம் என்பதாகும்!

காலம் மிகவும் சக்தி வாய்ந்தது
எப்பேர்பட்ட மனிதனையும் காலம்
அசைத்து பார்த்துவிடும்...
காலத்தை விட வேறு ஒரு சிறந்த
மருந்து நம் கவலைகளுக்கும் இல்லை!!
நேரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோமோ
அப்படியே அது நம்மை உருவாக்கும்!!
ஒவ்வொரு வினாடியும் நம் ஆயுள்
கழிந்துகொண்டிருக்கிறது!!
காலமும் நேரமும் யாருக்காகவும்
எதற்காகவும் காத்திருக்காது!!
அது ஓடுகின்ற ஓட்டத்தில் நாமும்
சேர்ந்து பயணித்தே ஆக வேண்டும்..
இல்லாவிட்டாலும் பரவாயில்லை,
காலம் ஓடிக்கொண்டுதான் இருக்கும்..

எதுவுமே நம் கையில் இருக்கும்வரை
அதன் அருமை தெரிவதேயில்லை
காலத்திற்கு மட்டும் விதிவிலக்கா என்ன!!
நேரம்,... நம் கையில் இன்று மற்றும் நாளை என்ற
இரண்டு வாய்ப்புகளை கொடுக்கிறது..ஆனால்,
நாம் இன்று என்பதை கருத்தில் கொள்வதேயில்லை....
இன்றைய நாள் வேண்டாம் என்று
ஒவ்வொரு நாளும் விட்டுகொடுக்கும்
அளவுக்கு வள்ளலாகிவிட்டோம்!!
நாளை நாளை என்று காலத்தை விட வேகமாக
நாம்தான் பயணிக்கிறோம்!

இன்று ஒருநாள்தானே..
போனால் போகட்டும் நாளை பார்த்துகொள்ளலாம்
என்ற அலட்சியம்தான்.. பல பிரச்சினைகளுக்கு காரணம்!
சிறுதுளி பெருவெள்ளம்..என்பதுபோல்,
எவ்வளவு பெரிய வெற்றியும்.. இழப்பும், சிறு
செயலில்தானே தொடங்குகிறது!

உதாரணமாக,
ஒரு புத்தகத்தை படிக்க ஒரு மாதம் ஆகுமா!!!??
என்னால் முடியாது..
என்று, அந்த நூலை படிக்கவில்லை
என்று வைத்துகொள்வோம்..ஆனால்,
அந்த ஒரு மாதம் போகத்தானே போகிறது...
நாம் படிக்காததால் நேரம் நின்றுவிடவா போகிறது!
அதற்கு, ஏன் அதை படித்துவிடக்கூடாது!!
ஒரு மாத முடிவில் படித்துவிட்டேன்
என்ற திருப்தியாவது கிடைக்குமே!!

தாய் தன் குழந்தைக்கு தங்கத்தால் ஊஞ்சல் கட்டினாலும்
வைரத்தால் ஆடை தைத்து போட்டாலும்
தாயின் ஐந்து நிமிட அரவணைப்பிற்கு ஈடாகாது!!
எவ்வளவு விலை உயர்ந்த பொருள்
வேண்டுமானாலும் நாம் விரும்புபவருக்கு
வாங்கி தரலாம்...ஆனால்,
உலகத்திலேயே மிகவும் விலை மதிப்பற்ற பரிசு..
அவர்களுக்காக சிறிது நேரத்தை ஒதுக்குவதுதான்!!

கால ஓட்டத்தில் எவ்வளவோ மாறிவிட்டன!!
நாளை திரும்பி பார்க்கையில்
நேற்றைய நாளாக மாற போகும் "இன்று"
எப்படியிருக்க வேண்டும்???
திருப்தியற்றதாகவா? மகிழ்ச்சியானதாகவா?
என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்..

மறு பிறவி என்பது இதுவரை
நிரூபிக்கப்படாத ஒன்று...
இந்த பூமியில் ஒருமுறைதான் பிறப்பு
ஒரு முறைதான் இறப்பு... அவ்வளவுதான்
நம் வாழ்க்கை...
மறுபிறவி என்பதெல்லாம் மனிதன்
உருவாக்கிய நம்பிக்கை..
இந்த பிறவியில் நன்மை செய்தால் சொர்க்கம்
தீமை செய்தால் நரகம்... என்று சொல்வது
மனிதனை நல்வழிபடுத்த மட்டுமே...
நம் ஆயுளுக்கு இரண்டாவது வாய்ப்பே இல்லை..
பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைப்பட்ட
காலத்தில் வாழ்வது சிலநூறு ஆண்டுகளே...
மண்ணில் புதைவதற்குள் வாழ்க்கையை
மகிழ்ச்சியாக அனுபவிப்போம்...
வாழ்க்கையை வாழ்வோம்...

அன்புடன்
சங்கீதா சீனிவாசன்

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

இயற்கையின் அழிவு நம் அழிவு...


இயற்கையின்
படைப்பில் திருப்தி
தராத இரண்டு விஷயங்கள்...
ஒன்று....மனித இனத்தை படைத்தது
மற்றொன்று அதை ஆறாவது அறிவோடு படைத்தது
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்,
எந்த உயிர்களாவது இயற்கையின்
விதியை இதுவரை மீறி உள்ளதா?
இயற்கையை அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதா?

நம்மை போலவே எல்லா உயிர்களுக்கும்
இந்த பூமியில் வாழ முழுத்தகுதியும், உரிமையும்
இடமும் உள்ளது.
இந்த உலகமே மனிதனுக்குத்தான் சொந்தம்
என்பது போல் நடந்துகொள்வது சரியா?

சிட்டுகுருவி என்ற ஒரு அழகிய
இனம்!! பார்க்கவே
அழகாக இருக்கும்!!!
சுறுசுறுப்பாக அங்கும் இங்கும்
சுற்றி திரியும் அந்த இனமே இப்போது இல்லை!!
மனிதனுக்கு ஒரு இனத்தையே
அழிக்கும் உரிமையை யார் கொடுத்தது?
அவ்வளவும் சுயநலம்.
எந்த உயிர்களை
பற்றியும் கவலை படுவதில்லை..
அதில் வியப்பேதுமில்லை..
மனிதர்கள் தன் சொந்த இனத்தை பற்றியே
கவலைபடுவதில்லை! இதில் எங்கே
சிட்டுக்குருவியை பற்றி நினைப்பது?

ஒரு பறவை இனத்தை பற்றிய செய்தியை
கேட்டு சற்று திகைத்தே போனேன்!!
அந்த குருவி,
நம் உள்ளங்கை அளவுதான் இருக்கும்
குளிரில் வாழாது..குளிர்காலம் வந்தவுடன்
வெப்பம் நிறைந்த பகுதிக்கு பறந்துவிடும்..
அது பறக்கும் தூரம் 1600 மைல்கள்..அட்லாண்டிக் கடலை
கடந்து வேறு ஒரு நாட்டிற்கு செல்ல பதினோரு நாட்கள்
ஆகும். அவை தொடர்ந்து 11 நாட்கள் உணவின்றி
உறக்கமின்றி, ஓய்வின்றி பறந்துகொண்டே இருக்குமாம்!!!

என்ன ஒரு ஆச்சரியம்!!!
நம்மால் ஒருவேளை கூட உணவு இல்லாமல்
இயல்பாக இருக்க முடிவதில்லை...
பதினோரு நாட்களுக்கு
தேவையான உணவை பயணத்திற்கு
முன்பே ஒரு மாதமாக சாப்பிட்டு உடலில்
சேர்த்து வைத்துக்கொள்ளும்..
எப்பேர்பட்ட இயற்கையின் படைப்பு!!!
இயற்கையின் ஒவ்வொரு
படைப்பும் அதிசயம் அல்லவா!!!

இயற்கையை நாம் எவ்வளவு
தொந்தரவு செய்கிறோமோ
அதை விட பல மடங்கு இயற்கை
நம்மை தொந்தரவு செய்யும்..

நமக்கு தேவையான ஆக்சிஜன்
மரத்திடமும் மரத்திற்கு தேவையான
கார்பன்டை ஆக்சைடு நம்மிடமும் ஏன் இருக்க வேண்டும்?
சுயநலம் கொண்டாவது மரங்களை காப்போம்
என்பதற்காக!

மகிழுந்துகள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள்
என நம் வசதிக்காக செய்யும் மாற்றங்கள்
எத்தனையோ உயிர்களின் அடிப்படை
தேவைக்கும், உயிர்வாழ்வதற்குமே
தொந்தரவாக உள்ளது..ஏன்,
வருங்காலத்தில் நமக்கும்தான்!!

இயற்கையிடம் நாம் அன்பாக
இருந்தால் அது நமக்கு நன்மை செய்யும்...
இல்லையென்றால்
பூகம்பத்தால் அழிவு,
சுனாமியால் அழிவு,
எரிமலை வெடிப்பு,
வெள்ளத்தால் அழிவு..என தொடரும்...
நாம் செய்த தவறால் எல்லா உயிர்களும் அழியும்...

போனது போகட்டும்.... இனியாவது
இயற்கையை பாதுகாப்போம்..
மரங்களை நடுவோம்..
இல்லாவிடில் வெட்டாமலாவது இருப்போம்..!
பிளாஸ்டிக்கை ஒழிப்போம்..
மழை நீரை சேமிப்போம்..
விவசாயத்திற்கு உயிரூட்டுவோம்..
இயற்கை வளங்களை சுரண்டுவதை
நிறுத்துவோம்..எல்லாவற்றிற்கும் மேலாக
இயற்கை விதிகளை மதிப்போம்!

மனித இனம் மட்டும் வாழ்ந்தால் போதும்
என்று நினைப்பது மடமை..
மற்ற உயிரினம் இல்லாமல் மனித இனம் கூட வாழ முடியாது...
இயற்கையை வாழவைப்போம்..மற்ற உயிர்களையும் மதிப்போம்...
எதையும் காரணமில்லாமல் இயற்கை படைப்பதில்லை..மனித இனத்தை படைத்தது இயற்கையை பாதுகாக்கத்தானே தவிர..அழிக்க அல்ல..எல்லாவற்றையும் தொழில் சார்ந்து சுயநலமாக பார்க்காமல் இயற்கையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டுமோ அதை உடனே செய்ய வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை..

சிந்தித்து செயல்படுத்துவோம்..



அன்புடன்
சங்கீதா சீனிவாசன்


புதன், 29 ஜூலை, 2015

84 வயது குழந்தையின் மறைவு




இந்தியா இழந்தது ...
விஞ்ஞானியையோ
நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரையோ,
ஏவுகணை நாயகனையோ அல்ல
சுயநலமற்ற நல்ல மனிதரை இழந்தது..
இந்தியாவின் வழிகாட்டியை இழந்தது..
இரண்டாவது காமராசரை இழந்தது..

எத்தனையோ குடியரசு தலைவர்கள் வரலாம்
இந்தியா பல விஞ்ஞானிகளை காணலாம்
இன்னும் எவ்வளவோ முன்னேற்றங்களை பார்க்கலாம்
ஆனால் அப்துல்கலாம் போல் ஒரு மாமனிதரை காணுமா??

ஏழை குடும்பத்தில் பிறந்து
அரசு பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பயிலும்
ஒவ்வொரு மாணவர்களுக்கும் முயற்சி,
எளிமை, நேர்மையின் முழு உருவமான
அப்துல்கலாம் அவர்களை தவிர வேறு
எவரும் மிகச்சிறந்த உதாரணமாக
திகழவே முடியாது...

கொடுமையிலும் கொடுமை
இளமையில் வறுமை!!
அத்தனை துன்பங்களையும் தன்
விடாமுயற்சியால் களைந்து...
இந்தியாவின் குடியரசு தலைவர்
பதவிக்கு வர எவ்வளவு
இடற்பாடுகளை சந்தித்திருக்க வேண்டும்!!
எவ்வளவு தியாகங்கள் செய்திருப்பார்!!
அவர் பட்ட இன்னல்களையெல்லாம்
கற்பனை கூட செய்துபார்க்க முடியாது!!..
நமக்கு சாதாரண தோல்வியோ துன்பமோ வந்தால் கூட துவண்டுவிடுகிறோம்..
எத்தனை அவமானங்களை,
தோல்விகளை
சந்தித்திருப்பார்!! ஆனாலும்
முகத்தில் சோர்வோ, கலக்கமோ,
கோபமோ, விரக்தியோ கலாமின்
குழந்தை முகத்தில் எவரும் இதுவரை
கண்டதில்லை!!
பிறந்தது முதல் இறந்தது வரை
தனக்கென்று எதுவுமே செய்துகொள்ளாமல்
அவரின் இந்த மானிட பிறவியை
முழுதும் நாட்டிற்காக மட்டுமே வாழ்ந்துள்ளார்!!

ஒரு மனிதன் எவ்வளவு நல்லவனாக
இருந்தாலுமே பதவியும் பணமும்
வந்துவிட்டால் அவன் எப்படியெல்லாம்
மாறுவான் என்பதற்கு எண்ணற்ற
உதாரணங்கள் உள்ள இந்த நாட்டில்,
பதவி பணம் இதெல்லாம் கிடைத்த பிறகும்
அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு
மனிதநேயம், தேச பற்று, எளிமை,
நேர்மை, மாணவர்களின் எதிர்காலம்
இதை பற்றியே எப்போதும்
சிந்தித்துக்கொண்டிருந்த உம்மைப்போல்
ஒரு மாமனிதரை இனி இந்தியா காணுமா???

உங்களை பெற்றதற்கு இந்தியாவும்,
தமிழும் பெருமை படுகிறது...
பாரதி, வள்ளுவன், கம்பனை பெற்றதற்கு
தமிழ் எவ்வளவு பெருமை
படுகிறதோ அதேபோல் தமிழ்
மாதவம் செய்திருக்கிறது
கலாமை பெற்றதற்கும்!!

வருங்கால தலைமுறையை
பொறுத்தவரை காந்தி, நேரு
போல கலாமும் என்றோ பிறந்து, வாழ்ந்து
மறைந்துவிட்ட ஒரு விஞ்ஞானி... ஆனால்,
எங்களுக்கு அப்படியில்லை!!
ஒரே காற்றை சுவாசித்து ஒரே
காலகட்டத்தில் வாழ்ந்ததன் தாக்கமாக
கூட இருக்கலாம்..ஏதோ ஒன்று...
வார்த்தைகளால் சொல்ல முடியாத
இதயப்பூர்வமான உணர்வு கலாமிற்கும்
இத்தலைமுறை இந்தியர்களுக்கும்
நிச்சயம் இருக்கிறது!!!! காந்தியையும்,
காமராசரையும் பார்த்ததில்லை....ஆனால்,
கலாமை பார்த்திருக்கிறோம்!!!

இனம், மொழி, மதம் கடந்து
இந்தியாவையே புரட்டிபோட்ட
மாமேதையின் பிரிவு... அதை
வார்த்தைகளால் சொல்ல முடியாது..
இந்த அன்பை நீங்கள் இருக்கும்போதே
காட்டியிருந்தால் நிச்சயம்
பெருமகிழ்வு அடைந்திருப்பீர்கள்!!
நமக்குதான் நம் அருகில் இருக்கும்வரை
எதன் அருமையும் தெரியாதே...
கலாம் மட்டும் விதிவிலக்கா என்ன!!!?

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒரு மாமனிதர்
உருவாகலாம்..ஆனால், அப்துல்கலாம்
என்ற தனி மனிதனின் சிறப்புகள், குணங்கள்,
ஆசைகள், கனவுகள், இலட்சியங்கள்,
தேச பற்று, தியாகம், உழைப்பு இவற்றை
அவர் இடத்தில் இருந்து யாராலும் நிரப்ப
முடியாது!! கலாம் இந்தியாவிற்கு கிடைத்த
அதிசய மனிதர்களில் ஒருவர்!!

இதில் ஆச்சரியம் என்னவென்றால்
கலாமிற்கு எப்போது வயதானது என்றே
தெரியவில்லை..அதற்கான எந்த அறிகுறியும்
இதுவரை நாம் பார்த்ததில்லை...
எப்பொழுதும் சுறுசுறுப்பு, குழந்தை போல்
குதூகலம், மெத்த படித்த கர்வமின்றி
எந்த வயதிலும் தெரியாததை
தெரிந்துகொள்ளும் ஆர்வம்...
84 வயது குழந்தை என்று
சொன்னால் அது கலாமை தவிர வேறு
யார்...

உங்கள் ஆத்மா இந்திய இளைஞர்களையும்,
இந்தியாவையும் உங்கள் அரிய புத்தகங்கள்,
உத்வேகமூட்டும் கருத்துகள்,
பேச்சுகள் மூலம் வழிநடத்திகொண்டுதான்
இருக்கும்..எங்கள் மனங்களிலும்
இந்திய நாட்டிலும் எந்நாளும்
வாழ்ந்துகொண்டுதான் இருப்பீர்கள்!!
உலகம் உள்ளவரை உங்கள் புகழ் வாழும்!!

ஆழ்ந்த அனுதாபங்களோடு....